சியோமி நிறுவனம் இந்தியாவில் Mi பேண்ட் 4 சாதனத்தை விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கென டீசர்களை அந்நிறுவனம் அமேசான் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் புதிய சாதனம் அமேசானில் விற்பனை செய்யப்பட இருப்பது உறுதியாகியிருக்கிறது.
புதிய Mi பேண்ட் 4 மாடலில் 0.95 இன்ச் கலர் AMOLED தொடுதிரை டிஸ்ப்ளே, ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 6-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர் வழங்கப்பட்டிருக்கிறது. இதை கொண்டு சைக்லிங், உடற்பயிற்சி, ஓட்ட பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை டிராக் செய்யும் வசதி கொண்டிருக்கிறது.
சியோமி Mi பேண்ட் 4 சாதனம் செப்டம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. சியோமியின் முந்தைய ஃபிட்னஸ் டிராக்கர்கள் சிறந்த அம்சங்களை குறைந்த விலையில் வழங்கியதால் அதிக பிரபலமாகின. சியோமியின் Mi பேண்ட் 4 ஏற்கனவே சீனாவில் வெளியிடப்பட்டது.
இந்தியாவில் சியோமி Mi பேண்ட் 4 விலை ரூ. 1700 இல் துவங்கி ரூ. 2000 வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Mi பேண்ட் 3 மாடல் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டது. Mi பேண்ட் 4 மாடலுடன் சியோமி ஸ்மார்ட் லிவ்விங் நிகழ்வினை நடத்துகிறது.
இதில் 65 இன்ச் Mi டி.வி. மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய டி.வி. சியோமியின் முதல் பெரிய மாடல் டி.வி. ஆகும். இதுதவிர இந்தியாவில் ரெட்மி டி.வி. அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது.