வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் LED டி.வி. சாதனங்களுக்கு மத்திய அரசு 5 சதவிகிதம் வரி விதித்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்த வரி விதிப்பு அமலில் உள்ளது. இந்த இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
LED . டி.வி.யில் பொருத்தப்படும் பல நவீன கருவிகள் மீதும் மத்திய அரசு வரி விதித்து இருந்தது. அதையும் நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு மத்திய நிதி அமைச்சகம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் LED. டி.வி.க்கள் மீதான 5 சதவிகித வரி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இனி வெளிநாடுகளில் இருந்து எல்.இ.டி. டி.வி.க்களை எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் தயாரிப்பாளர்கள் இறக்குமதி செய்ய முடியும்.
LED. டி.வி. மீதான 5 சதவிகித இறக்குமதி டேக்ஸ் நீக்கப்பட்டு விட்டதால் இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பாளர்கள், தொலைக்காட்சி விற்பனையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாயை நுகர்வோர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.
நாடு முழுவதும் நவராத்திரி, தீபாவளி ஆகிய பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வர உள்ளன. இந்த நேரத்தில் எல்.இ.டி. டி.வி. விலை குறையும் பட்சத்தில் அதிக அளவு தொலைக்காட்சி பெட்டிகளை விற்பனை செய்ய முடியும் என்று வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எனவே இனி LED . விலை கணிசமாக குறைய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக 4 சதவிகிதம் அளவுக்கு விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.