ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் முதல் காலாண்டு வரையிலான வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.8,109 கோடி வருவாய் ஈட்டியிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ லாபம் மட்டும் ரூ.612 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது 13.8% அதிகம் ஆகும்.
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் ஜியோ பயனர்கள் எண்ணிக்கை 21.53 கோடியாக இருக்கிறது. இந்த காலாண்டில் மட்டும் 2.87 கோடி பயனர்களை சேர்த்திருக்கிறது. இதே காலக்கட்டத்தின் போது முந்தை ஆண்டில் ஜியோ நெட்வொர்க்கில் சுமார் 2.65 கோடி பயனர்கள் சேர்ந்திருந்தனர்.
இந்த காலாண்டில் ஒரு சந்தாதாரர் மூலம் கிடைக்கும் வருவாய் மாதம் ரூ.134.5, முந்தைய காலாண்டில் ரூ.137.1 ஆக இருந்தது. இதேபோன்று ஜியோ பயனர்களின் வயர்லெஸ் டேட்டா பயன்பாட்டு அளவு 642 கோடி ஜிபி ஆக இருக்கிறது. அதன்படி சராசரி வாய்ஸ் கால் பயன்பாடு நாள் ஒன்றுக்கு 44,871 கோடி நிமிடங்கள் ஆகும். ஒரு மாதத்திற்கான வீடியோ பயன்பாடு 340 கோடி மணி நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகளவு மொபைல் டேட்டா பயன்படுத்தப்பட்ட நிறுவனங்கள் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய வோல்ட்இ நெட்வொர்க்காக ஜியோ இருக்கிறது. மேலும் 100% நெட்வொர்க் திறன் மற்றும் 0.13% அளவில் மிக குறைந்த கால் டிராப் அளவினை பதிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.
ஜியோ நிறுவன ஜிகாஃபைபர் சேவைகள் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன 41-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியா முழுக்க 1100 நகரங்களில் வழங்கப்பட இருக்கும்ஜிகாஃபைபர் சேவைகளுக்கான முன்பதிவு ஆகஸ்டு 15-ம் தேதி துவங்குகிறது. அதிகளவு முன்பதிவு பெரும் பகுதிகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இவை வழங்கப்பட இருக்கிறது.