பாரதி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து ஒரு கோடி வாடிக்கையாளர்களை ஏப்ரல் 2018-இல் சேர்த்துள்ளன. இதே காலக்கட்டத்தில் வோடபோன் நிறுவனம் சுமார் 6.64 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இந்த தகவல்கள் இந்திய செல்லுலார் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
ஐடியா செல்லுலார் நிறுவனம் அதிகபட்சமாக 55.5 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. இதன் மூலம் ஐடியா செல்லுலார் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 21.67 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய செல்லுலார் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் 2018 வரையிலான காலகட்டத்தில் மட்டும் இந்தியாவில் சேவை வழங்கும் தனியார் டெலிகாம் நிறுவனங்களில் சுமார் 104.9 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர், இவற்றில் ஏர்செல், ரிலையன்ஸ் ஜியோ, எம்டிஎன்எல் மற்றும் டெலினார் நிறுவனங்களும் அடங்கும். என செல்லுலார் கூட்டமைப்பு வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்மாதம் மொபைல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையின் வளர்ச்சி ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. டெலிகாம் துறையில் சீரான கனெக்டிவிட்டி நாடு முழுக்க வழங்குவதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக இந்திய செல்லுலார் கூட்டமைப்பு நிர்வாக இயக்குனர் ராஜன் எஸ் மேத்யூ தெரிவித்தார்.
இந்தியாவில் 30.86 கோடி வாடிக்கையாளர்களுடன் பாரதி ஏர்டெல் நிறுவனம் முன்னணி இடத்தில் உள்ளது. ஏப்ரல் 2018 காலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் சுமார் 45 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன் இந்தியா சுமார் 22.2 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக இந்திய செல்லுலார் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 22 டெலிகாம் வட்டாரங்களில் 12 இடங்களில் வோடபோன் நிறுவனம் சுமார் 6.64 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. அதிகபட்சமாக மத்திய பிரதேச மாநிலத்தில் வோடபோன் சேவையை பயன்படுத்தியதில் 2.42 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர். இதைத்தொடர்ந்து மகாராஷ்ட்ரா, பஞ்சாப், பீகார், உத்திர பிரதேசம் மேற்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.