அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனமான சில்வர் லேக் பார்ட்னர்ஸ் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெயில் பிரிவின் 1.75 சதவீத பங்குகளை வாங்க இருப்பதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் தெரிவித்து உள்ளது.
இதற்காக ரிலையன்ஸ் ரீடெயில் பிரிவில் சில்வர் லேக் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ. 7500 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் தனது ரீடெயில் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த துவங்கி உள்ளது.
இதன் காரணமாக அடுத்த சில காலாண்டுகளில் மேலும் சில நிறுவனங்கள் ரிலையன்ஸ் ரீடெயில் பிரிவில் முதலீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில்வர் லேக் முதலீடு நடவடிக்கை ரிலையன்ஸ் ரீடெயில் பிரிவின் மதிப்பை ரூ. 4.21 லட்சம் கோடி என கணக்கிட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.
இந்திய சந்தையில் ரீடெயில் வியாபாரத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் ரிலையன்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் ஃபியூச்சர் குழுமத்தின் சில்லறை வியாபார பிரிவை ரூ. 24 ஆயிரம் கோடி கொடுத்து வாங்கியது.