வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களின் இணைப்பு கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டு இந்திய டெலிகாம் சந்தையில் புதிதாக வோடபோன் ஐடியா லிமிட்டெட் துவங்கப்பட்டது. புதிய நிறுவனம் இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பாரதி ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளியது.
டெலிகாம் சந்தையில் புதிய போட்டியாளரை எதிர்கொள்ள ஏர்டெல் தயாராகிவிட்டது. அதன்படி ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு மாதம் ரூ.50 தள்ளுபடி அறிவித்துள்ளது. ரூ.399 மைபிளான் இன்ஃபினிட்டி சேவையை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.50 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.349 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும் இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் ரூ.300 தள்ளுபடி பெற முடியும். புதிய சலுகையின் மூலம் ஏர்டெல் போஸ்ட்பெயிட் துவக்க சலுகை வோடபோனின் ரெட் போஸ்ட்பெயிட் சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. வோடபோனின் போஸ்ட்பெயிட் சலுகைகள் ரூ.299 விலையில் துவங்கும் நிலையில் ஏர்டெல் சலுகை வரிகளுடன் சேர்த்து ரூ.385 விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஏர்டெல் ரூ.399 போஸ்ட்பெயிட் சலுகையில் பயனர்களுக்கு 20 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த மாதத்திற்கு கொண்டு செல்லும் வசதி வழங்கப்படுகிறது. எனினும், 12 மாதங்களுக்கு ஏர்டெல் நிறுவனம் மாதம் 20 ஜிபி டேட்டா வழங்குகிறது.
இதன் மூலம் மாதம் 40 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர்டெல் டிவி சந்தா மற்றும் வின்க் மியூசிக் சேவை உள்ளிட்டவற்றுக்கு இலவச சந்தா வழங்கப்படுகிறது.