பாரதி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் பாரதி மிட்டல் இந்தியாவில் டேட்டா சலுகை கட்டணம் மிகக்குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் விரைவில் விலை உயர்வை எதிர்கொள்ள வாடிக்கையாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருப்பது போன்று ரூ. 3700 முதல் ரூ. 4400 வரை கட்டணம் வசூலிக்கும் எண்ணில்லை, எனினும், ரூ. 160 விலையில் 16 ஜிபி டேட்டா வழங்குவது கட்டுப்படியாகவில்லை என மிட்டல் தெரிவித்து இருக்கிறார். தற்போதைய சூழலில் ஏர்டெல் 1 ஜிபி டேட்டாவுக்கு ரூ. 8 வசூலித்து வருகிறது.
தற்சமயம் பயனர்களுக்கு ரூ. 160 கட்டணத்தில் 16 ஜிபி வழங்கப்படுகிறது. உண்மையில், இந்த விலைக்கு 1.6 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட வேண்டும். அமெரிக்கா அல்லது ஐரோப்பா போன்று இந்தியாவில் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த துறையில் சீரான வியாபாரத்தை மேற்கொள்ள பயனர் ஒருவரிடம் இருந்து மாதம் ரூ. 300 வருவாய் கிடைக்க வேண்டும். எனினும், தற்சமயம் இது மாதத்திற்கு ரூ. 157 ஆக இருக்கிறது.