ஸ்மார்ட்போன் சந்தையில் ஹூவாய், விவோ போன்ற நிறுவனங்கள் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழில்நுட்பத்தை வழங்கி வரும் நிலையில், சாம்சங் ஸ்மார்ட்போன்களில் இந்த தொழில்நுட்பம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் பத்தாவது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் மாடலில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டது, எனினும் சாம்சங் கேலக்ஸி எஸ்10 மாடலில் தான் இந்த தொழில்நுட்பத்தை சாம்சங் வழங்கும் என தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்குவது குறித்த இறுதி முடிவினை சாம்சங் விரைவில் எடுக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், சாம்சங் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் உதிரிபாகங்களை வழங்கும் நிறுவனங்களிடம் கேலக்ஸி நோட் 9 மாடலில் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சார் வழங்கும் முடிவை திரும்ப பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் சீன நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கிவிட்ட நிலையில், சாம்சங் சாதனங்களில் இந்த அம்சம் முற்றிலும் சிறப்பாக வேலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களில் வழங்க அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சாரை உருவாக்கி வருவதாகவும், இது தற்சமயம் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை விட மிக துல்லியமாக இயங்கும் என கூறப்படுகிறது.
சாம்சங் உருவாக்கி வரும் தொழில்நுட்பம் அல்ட்ராசோனிக் பல்ஸ்-ஐ டிரான்ஸ்மிட் செய்யும். ஒவ்வொரு கைரேகையிலும் இருக்கும் மிக நுனுக்கமான தகவல்களை அதிவேகமாக சேகரித்து சென்சாருக்கு அனுப்பும். இதனால் கூடுதல் தகவல்களை டிரான்ஸ்மிட் செய்து கைரேகையை மிக நுனுக்கமாக பிரதிபலிக்கும்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 2019 ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.