சாம்சங் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் இரண்டு அதிகாரப்பூர்வ அறிமுக வீடியோக்களை வெளியிட்டு, பின் அவற்றை எடுத்து விட்டது. புதிய வீடியோக்களின் மூலம் நோட் 9 ஸ்மார்ட்போனில் 512 ஜிபி மெமரி வழங்கப்பட இருப்பது உறுதியாகியுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட இருக்கிறது.
நோட் 9 ஸ்மார்ட்போனுடன் புதிய எஸ் பென் ஸ்டைலஸ், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கிறது. இதன் எஸ் பென் கீழ்புறம் பட்டன் மற்றும் க்ளிக்கர் ஒன்றை கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போனின் பின்புறம் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் கேமராவின் கீழ் புறம் சாம்சங் பிரான்டிங் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் ஐரிஸ் சென்சார் முன்பக்கம் வழங்கப்படுகிறது. புதிய நோட் 9 ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9810 அல்லது ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம்.
இதன் கேமரா சென்சார்கள் தற்சமயம் விற்பனையாகும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். இத்துடன் சாம்சங்கின் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவை மேம்படுத்தப்பட்டு பிக்ஸ்பி 2.0 வெர்ஷன் அறிமுகம் செய்யலாம். புதிய நோட் 9 ஸ்மார்ட்போன் பிளாக், புளு, கிரே, லாவென்டர் மற்றும் புதிய பிரவுன் நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.
புதிய கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் விலை 1000 டாலர்களுக்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்டு 9-ம் தேதி தெரியவரும்.