ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6தி மாடல் டீசர் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் 6T விளம்பர வீடியோ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பப்பட்டது. ஆசிய கோப்பை தொடரின் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டியின் போது இந்த விளம்பரம் ஒளிபரப்பனது.
விளம்பர வீடியோவில் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் நடத்திருக்கிறார். ஒன்பிளஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஒன்பிளஸ் 6டி விளம்பர வீடியோவில் வளைந்த கிளாஸ் ஸ்கிரீன் மற்றும் வளைந்த ஓரங்கள் இடம்பெற்றிருந்தது.
பின்புறம் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கும் டூயல் பிரைமரி கேமரா அமைப்பு வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் ஒப்போ ஆர்17 ப்ரோ போன்று மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்படவில்லை என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. தொலைகாட்சி சேனல்களைத் தொடர்ந்து அமேசான் வலைத்தளத்திலும் ஒன்பிளஸ் 6டி டீசர் பதிவிடப்பட்டுள்ளது.
புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுவதை ஒன்பிளஸ் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. அந்த வகையில் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டு, பெரிய பேட்டரி வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.