சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை வெளியிட தயாராகி விட்டது. ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் குறித்த முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது.
நான்கு நொடிகள் ஓடக்கூடிய சிறிய டீசர் வீடியோவில் ‘The speed you need’ மற்றும் ‘6et Ready’ என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருக்கிறது. இவை புதிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 6 என அழைக்கப்படுவதை உறுதி செய்திருக்கிறது. சமீபத்தில் புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தவல்கள் இணையத்தில் கசிந்திருந்தது.
இதுகுறித்து கிஸ்மோசைனா வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு முன்னதாகவே வெளியிடப்படலாம் என கூறப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு சற்று முன்னதாகவே இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இம்மாத இறுதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் ஐபோன் X ஸ்மார்ட்போன் போன்ற நாட்ச் வழங்கப்படும் என்றும் இதற்கான காரணத்தையும் ஒன்பிளஸ் தெரிவித்திருந்தது. ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய் ஐபோன் X ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது ஒன்பிளஸ் 6 நாட்ச் அளவில் சிறியதாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.
ஐபோன் X போன்று ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் வழங்கப்படவில்லை என்பதால் சிறிய நாட்ச் போதுமானது என அவர் மேலும் தெரிவித்திருந்தார். ஏற்கனவே ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு விட்டது.
அந்த வகையில் ஒன்பிளஸ் 6 ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் ஆன்ட்ராய்டு பி அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் முந்தைய ஒன்பிளஸ் 5T மாடலுடன் ஒப்பிடும் போது 50% வரை விலை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் ஒன்பிளஸ் 6 விலை ரூ.48,800 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.