ரிலையன்ஸ் நிறுவன ஜியோபோனில் வாட்ஸ்அப் மற்றும் யூடியூப் சேவைகள் ஆகஸ்டு 15-ம் தேதி முதல் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நோக்கியா மொபைல்களை விற்பனை செய்யும் HMD குளோபல் தனது நோக்கியா 8810 4ஜி போனில் வாட்ஸ்அப் வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 8810 4ஜி போன் பனானா போன் என அழைக்கப்படுகிறது. கைஓஎஸ் (KaiOS) சார்ந்த ஸ்மார்ட் ஃபீச்சர் ஓ.எஸ் கொண்டிருக்கும் நோக்கியா 8810 மாடலில் கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் சர்ச் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்றவை வழங்கப்படுகிறது.
இத்துடன் நோக்கியாவின் பிரபல ஸ்னேக் கேம், அப்டேட் செய்யப்பட்டு வெர்ஷன் நோக்கியா 8810 மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும் இதுவரை வாட்ஸ்அப் வசதி வழங்கப்படாமல் உள்ளது. ஹெச்.எம்.டி. குளோபல் தலைமை அலுவலர் ஜூஹோ சர்விகாஸ் ட்விட்டரில், "Oh look, WhatsApp on KaiOS! Looking forward to going [banana]s!" என குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் ஜியோபோன் போன்றே விரைவில் நோக்கியா 8810 மாடலிலும் வாட்ஸ்அப் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.
ஃபீச்சர்போன்களில் வாட்ஸ்அப் வசதி வழங்கப்படாமல் இருப்பதாலேயே பலர் ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இந்தியாவில் 2.5 கோடி பேர் ஜியோபோன் பயன்படுத்தும் நிலையில், நோக்கியா 8810 மாடலில் வாட்ஸ்அப் வழங்கப்படும் பட்சத்தில் ஜியோபோனுக்கு நேரடியாக போட்டியாக நோக்கியா பனானா போன் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஜியோபோன் மற்றும் நோக்கியா 8810 மாடல்களில் வாட்ஸ்அப்-ஐ தொடர்ந்து பிரபல செயலிகள் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் இவை பல்வேறு இதர விலை குறைந்த ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும். ஆன்ட்ராய்டில் இருப்பதை போன்றே கைஓஎஸ் வெர்ஷனிலும் வாட்ஸ்அப் இருக்குமா அல்லது சில அம்சங்கள் வேறுபடுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
நோக்கியாவின் பிரபல 8810 மாடலை புதுப்பித்து 4ஜி வோல்ட்இ கனெக்டிவிட்டியுடன் நோக்கியா 8810 4ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்த வரை நோக்கியா 8810 4ஜி போனில் 2.45 இன்ச் QVGA 240×320 பிக்சல், 1.12 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 சிப்செட், 512 எம்பி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
4ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிரு்கும் நோக்கியா 8810 4ஜி மாடலில் 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வைபை, ப்ளூடூத், மைக்ரோ-யுஎஸ்பி, எஃப்.எம். ரேடியோ, 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் மற்றும் 1500 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.