ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் பிப்ரவரி 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இவ்விழா சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வுக்கான ஹூவாய் அரங்கில் நடைபெற இருக்கிறது.
முன்னதாக நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவுக்கான முன்னோட்ட நிகழ்வில் ஹூவாய் தனது 5ஜி ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகமாகும் என தெரிவித்திருந்தது. 5ஜி தொழில்நுட்பத்துடன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனும் அறிமுகமாகிறது.
2017 ஆம் ஆண்டு முதல் ஹூவாய் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு வெளியான காப்புரிமை விவரங்களில் ஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் சிறிய இடைவெளி கொண்டிருப்பது தெரியவந்தது.
கடந்த ஆண்டு ஹூவாய் நிறுவனம் மேட் எஃப், மேட் ஃபிளெக்ஸ், மேட் ஃபிளெக்சி மற்றும் மேட் ஃபோல்டி போன்ற பெயர்களுக்கு ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் காப்புரிமை பெற்றிருந்தது. முன்னதாக வெளியான தகவல்களில் ஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 8-இன்ச் டிஸ்ப்ளேவும் மடிக்கப்பட்ட நிலையில் 5-இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்தது.
சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் ஹூவாய் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 24 ஆம் தேதி மதியம் 2 மணி (இந்திய நேரப்படி மாலை 6.30 மணி) துவங்குகிறது.