கூகுள் நிறுவன பிக்சல் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், கூகுள் வலைதளத்திலேயே பிக்சல் 3A ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டது.
பிக்சல் 3A ஸ்மார்ட்போன் பிக்சல் 3 மாடலின் சிறிய ரக ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. கூகுள் ஸ்டோர் வலைதளத்தில் பிக்சல் 3A என்ற பெயரில் ஸ்மார்ட்போன் தவறுதலாக பட்டியலிடப்பட்டு, பின் நீக்கப்பட்டு விட்டது. இந்த ஸ்மார்ட்போன் பிக்சல் ஸ்டோரின் போன்ஸ் (Phones) பிரிவின் கம்பேர் போன்ஸ் (Compare Phones) பிரிவில் காணப்பட்டது.
கூகுள் நிறுவனம் 2019 I/O நிகழ்வை மே மாதம் நடத்த திட்டமிட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் பலமுறை வெளியானது. அதன்படி பிக்சல் ஸ்மார்ட்போன்கள் இருவித பதிப்புகளில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
இவற்றில் ஸ்னாப்டிராகன் 670 ரக பிராசஸர்கள் வழங்கப்படும் என்றும் 5.6 இன்ச் மற்றும் 6.0 இன்ச் OLED டிஸ்ப்ளே, 12 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன்களில் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் மீண்டும் வழங்கப்படலாம் என தெரிகிறது.
இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் கோடை காலத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக கூகுள் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களை அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. அந்த வகையில் புதிய பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் கூகுள் I/O 2019 நிகழ்வில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது