சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் குறித்த பெரும்பாலான தகவல்கள் இணையத்தில் கசிந்து வரும் நிலையில், இந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் மிகமுக்கிய அம்சம் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளது.
ட்விட்டரில் ஐஸ் யுனிவர்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் இன்ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், புதிய சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் வழக்கமான கைரேகை செனசார் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இம்முறை கிடைத்திருக்கும் தகவல்கள் ஐஸ் யுனிவர்ஸ் மூலம் வெளியாகியுள்ளதால், இது அதிக நம்பகத்தன்மை கொண்டதாக பார்க்கப்படுகிறது. முன்னதாக கேலக்ஸி நோட் 8 உண்மையான புகைப்படங்கள், கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்9 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் விவரங்களை ஐஸ் யுனிவர்ஸ் மூலம் சரியாக வெளியனது குறிப்பிடத்தக்கது.
புதிய ஸ்மார்ட்போனில் இன்டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படாததற்கான காரணங்கள் அறியப்படவில்லை. எனினும் முந்தைய கேலக்ஸி நோட் 8 மற்றும் கேலக்ஸி எஸ்9 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் இந்த தொழில்நுட்பம் எதிர்பார்த்த அளவு சீராக வேலை செய்யவில்லை என்பதால் வழங்கப்படாமல் இருந்தது. இதே காரணத்திற்காகவே புதிய ஸ்மார்ட்போனில் இருந்தும் இந்த தொழில்நுட்பம் நீக்கப்பட்டிருக்கலாம்.
விவோ போன்ற நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழி்ல்நுட்பத்தை வழங்கும் போது சாம்சங் வழங்க ஏன் தாமதமாகிறது என்ற கேள்வி பெருமளவு எழுகிறது. இதற்கு முக்கிய காரணமாக விவோ தனது X20 பிளஸ் UD ஸ்மார்ட்போனினை குறைந்த அளவு தயாரிப்பது தான் கூறப்படுகிறது.
சாம்சங் நிலையில் இந்த தொழில்நுட்பத்தை வழங்குவது பெரிய திட்டமாகும். இதனால் தயாரிப்பு பணிகளில் விவோ போன்று சாம்சங் அதிரடி முடிவுகளை எடுக்க முடியாத சூழலில் உள்ளதாக கூறப்படுகிறது.
எதுவானாலும் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் சாம்சங் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழில்நுட்பத்தை வழங்க இருப்பது சமீபத்தில் வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எஸ் சீரிஸ் 10-வது ஆண்டு விழாவை குறிக்கும் என்பதால், இந்த தொழில்நுட்பம் வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.