சூரிய குடும்பத்தில் புதிதாக கிரகங்கள் உள்ளதா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் கார்னெஜீ அறிவியல் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சூரிய குடும்பத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள கிரகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். சிலி, ஹவாய், அரிசோனா ஆகிய பகுதிகளில் தொலைநோக்கிகளைப் பொறுத்தி ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது, வியாழன் கிரகத்தைச் சுற்றி மேலும் 12 சந்திரன்கள் இருப்பது தெரியவந்தது. இதில், 2 சந்திரன்கள் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 10 சந்திரன்கள் குறித்த தகவல்களை விஞ்ஞானிகள் வெளியிட்டனர். இதன்மூலம், வியாழன் கிரகத்தைச் சுற்றிவரும் சந்திரன்களின் எண்ணிக்கை 79-க அதிகரித்துள்ளது.
இவற்றில் சில சந்திரன்கள் வியாழன் சுற்றும் பாதையிலேயே சுற்றுவதாகவும், மீதமுள்ளவை எதிர்திசையில் சுற்றுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக, சந்திரன்கள் மோதிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். சூரியக் குடும்பத்தில் அதிக சந்திரன்களைக் கொண்ட கிரகமாக வியாழன் இருப்பது குறிப்பிடத்தக்கது.