தங்கத்தின் விலை எப்படி மதிப்பிடப்படுகிறது ? விலை ஏற்ற தாழ்வு எப்படி நடைபெறுகிறது?

Updated on 12-Jan-2023
HIGHLIGHTS

கடந்த ஆண்டு பொதுமுடக்கக் காலத்தின் போது தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது.

தொழில்துறையில் தேக்கம் நிலவுகிறது. இதனால், தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்திக்கிறது.

கடந்த ஆண்டு பொதுமுடக்கக் காலத்தின் போது தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. ரூ.43 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. அச்சமயம் தொழில்துறையில் நிலவிய தேக்கம்    தங்கம் விலை உயர்வுக்கு    வித்திட்டது. பின்னர், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு தங்கம் விலை கணிசமாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் தொழில்துறையில் தேக்கம் நிலவுகிறது. இதனால், தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்திக்கிறது.

தங்க நகையின் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

பொதுவாக, தங்க நகையின் விலை, 22 அல்லது 18 காரட் தங்கத்தின் சந்தை மதிப்பு, செய்கூலி மற்றும் ஜிஎஸ்டி வரியை உள்ளடக்கும். செய்கூலி, நகைக்கு நகை வேறுபடும். நகையில் இருக்கும் டிசைன்களைப் பொறுத்து செய்கூலியும், சேதாரமும் மாறுபடும். அனைத்து நகைக்கடைகளிலும் தங்கத்தின் விலை ஒரே மாதிரியாக இருந்தாலும்,செய்கூலி, சேதாரத்தின் விகிதம் வேறுபட்டிருக்கும். இதனால், வாடிக்கையாளர்கள் நகை கடைகளில் பேரம் பேசினால், செய்கூலி, சேதாரத்தின் விலையைக் குறைத்துக் கேட்கலாம். தங்கத்தின் மீது 3% ஜிஎஸ்டியும் செய்கூலி மீது கூடுதலாக 5% ஜிஎஸ்டி வரியும் வதிக்கப்படுகிறது. முக்கியமாக, கல் பதித்த நகைகள் என்றால், கல்லின் எடை நகையின் மொத்த எடையிலிருந்து கழிக்கப்படும். கல்லின் மதிப்பு தனியாகச் சேர்க்கப்படும். பொதுவாக தங்கம் விலை சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை என இடங்களுக்கு தகுந்தபடி விலையில் மாறுபாடு இருக்கும். அதன் தரம் மற்றும், இறக்குமதி வரி போன்ற பல்வேறு காரணங்களால் இந்த மாறுபாடு இருக்கும். தற்போதைய நிலையில் இறக்குமதி சுங்க வரி 10 சதவிகிதமாக இருக்கிறது.

22 மற்றும் 24 காரட் தங்கம் என்றால் என்ன?

காரட் என்பது தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும் குறியீடாகும். தங்கத்துடன் தாமிரம், துத்தநாகம், நிக்கல் போன்ற உலோகங்களைச் சேர்த்தால் மட்டுமே நகை செய்ய முடியும். தங்கத்துடன் மற்ற உலேகங்களைச் சேர்க்கும்போது அதன் காரட் குறியீடு குறைந்துகொண்டே வரும். சந்தையில் 24,22,18,14 காரட்டுகளில் தங்கம் கிடைக்கின்றது. 24 காரட் தங்கம் , மற்ற உலோகங்களின் கலவை இல்லாத, சுத்தமான தங்கமாகும். மற்ற காரட் தங்கத்தை விட சற்றே விலையுயர்ந்தது. 22 காரட் தங்கம், 22 பங்கு தங்கம் மற்றும் 2 பங்கு தாமிரம் போன்ற உலோகங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவையாகும். இது 24 காரட்டை விட அதிக தடிமானைத்தைக் கொண்டுள்ளதால் இக்கலவை நகை செய்ய பயன்படுத்தப்படுகிறது. இது 916 தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

தங்க நகையில், சேதாரம் என்றால் என்ன?

கையாலோ அல்லது இயந்திரத்தின் உதவியாலோ தங்கத்தை உருக்கி நகை செய்யும்போது, ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் வீணாகிறது. இதுதான் சேதாரம். இயந்திரத்தைப் பயன்படுத்தி நகைகள் செய்யும்போது சேதாரம் குறையும். ஆண்டிக்,டெம்பில் ஜுவல்லரி போன்ற அதிக கைவேலையைக் கொண்ட நகைகளில் சேதாரம் அதிகமாக இருக்கும். சேதாரம் பொதுவாக 3% முதல் 35% வரை இருக்கும். கூடுதலாக, நகைகளில் ஏதேனும் கற்கள் பதிக்கப்பட்டால் , அந்த செலவும் தங்கத்தின் விலையில் சேர்க்கப்படும்.

டாலர் மதிப்பு ஏறி, இறங்குவதற்கும் தங்கத்துக்கும் என்ன சம்மந்தம்?

அமெரிக்க அரசாங்கம் பெரிய தங்க உற்பத்தியாளராக இல்லாத போதிலும், உலகத்தில் உள்ள தங்கத்தின் ஒரு பெரிய பகுதியை இருப்பில் வைத்திருக்கிறது. அதனால் தங்கம் விலையைத் தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்கா இருக்கிறது. அதனால் அனைத்து நாடுகளும், தங்கத்தை அமெரிக்க டாலரில் கொடுத்து வாங்குகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இப்படி தொடர்ந்து குறைந்தால், அதிக ரூபாய் கொடுத்து டாலர் வாங்க வேண்டி இருக்கும். எனவே, நிறுவனங்கள் இறக்குமதி செய்ய அதிக டாலர்களைச் செலுத்த வேண்டியிருக்கும். அரசாங்கமும் தங்கத்தை வாங்குவதற்காக அதிக டாலர்களைச் செலுத்த வேண்டியிருக்கும். இதன் விளைவாக தங்கத்தின் விலை உயர்கிறது. மாறாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும் போது. தங்கத்தை இறக்குமதி செய்ய, அதிக டாலர்களை செலவு செய்யத் தேவையில்லை. இதனால் தங்கத்தின் விலை குறைகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :