இந்தியாவைச் சேர்ந்த புதிய பயனர்கள், தங்களின் ஆதார் கார்டில் உள்ள பெயரிலேயே பேஸ்புக்கில் லோக் இன் செய்ய வேண்டும் என்று பேஸ்புக் அறிவித்துள்ளதாக, ஆன்லைனில் செய்திகள் பரவின. அதே நேரத்தில், இந்தச் செயல்பாட்டின் மூலம் ஆதார் கார்ட் தகவல்களைத் திரட்டும் நோக்கம் எதுவும் இல்லை என்று சமூக இணையதள ஜாம்பவானான பேஸ்புக் தெளிவுப்படுத்தி உள்ளது.
மேலும், ஒரு சமூக வலைத்தளத்திற்குள் வரும் புதிய பயனர், தனது உண்மையான பெயரில் லோக் இன், தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உடன் எப்படி இணைப்பைப் பெறுவது என்பது குறித்த ஒரு சிறிய பரிசோதனையில் ஈடுபட்டு வருவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், “இந்தச் சோதனையின் மூலம் மக்களின் ஆதார் அட்டை தகவல்களை நாங்கள் பெறுவதாக சிலர் தவறாக திரித்து கூறுகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.
இந்தப் பரிசோதனை இப்போது முடிவடைந்து, பேஸ்புக் கணக்கின் உள்நுழையும் பக்கத்தில் கூடுதலாக மொழியை உட்படுத்தி உள்ளதால், தங்களின் ஆதார் அட்டையில் உள்ள பெயரை பயன்படுத்தினால், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எளிதாக கண்டறிய உதவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிசோதனையின் போது லோக் இன் செய்து அதில் பங்கேற்ற பயனர்களுக்கு, “உங்கள் ஆதார் கார்டில் உள்ள பெயரைப் பயன்படுத்துவதன் மூலம் நண்பர்களால் உங்களை எளிதாக கண்டறிய முடியும்” என்று காண்பிக்கப்பட்டிருக்கும்.
இந்தப் பரிசோதனையில் பங்கேற்றவர்களிடம் இருந்து, அவர்களின் ஆதார் அட்டை நம்பரை அளிக்குமாறு கூட, சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியாவைச் சேர்ந்த குறுகிய எண்ணிக்கையிலான பயனர்களை மட்டுமே இந்தப் பரிசோதனையில் உட்படுத்திய பேஸ்புக் நிறுவனம், இந்தப் பரிசோதனையை மேலும் தொடரும் எந்தத் திட்டமும் தற்போதைக்கு இல்லை என்று தெரிவித்துள்ளது.