வாட்ஸ்அப் செயலி மற்ற சமூக வலைதளங்களை போன்று தகவல்களை பகிர்ந்து கொள்ள மிகமுக்கிய தளமாக மாறியிருக்கிறது. எனினும், மற்ற தளங்களை போன்றே வாட்ஸ்அப் செயலியிலும் போலி மற்றும் தவறான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுவது அதிகரித்து கொண்டே இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியில் மேற்கொள்ளப்படும் புதிய மாற்றங்களின் படி அரசாங்கம் பயனர் குறுந்தகவல்களை கண்காணிக்க இருப்பதாக தகவல் வேகமாக பரவுகிறது.
வேகமாக பரவும் மெசேஜ்களில் பயனர் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு மூன்று புளூ டிக்கள் வரும் பட்சத்தில் அதனை அரசு நிறுவனம் கண்காணித்து இருக்கும் என கூறப்பட்டது. மேலும் இரண்டு புளூ டிக் மற்றும் ஒரு சிவப்பு நிற டிக் வரும் பட்சத்தில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இத்துடன் இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த இதனை வேகமாக பகிரக்கோருகிறது.
முன்னதாக இதேபோன்ற குறுந்தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு இருந்தது. முந்தைய வைரல் பதிவுகளில் பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் செய்தி தொகுப்பு போன்ற படமும் சேர்க்கப்பட்டு இருந்தது. தற்சமயம் இதே தகவலினை பிஐபி வெளியிட்டு இருப்பதாக கூறி பகிரப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து பிஐபி விளக்கம் அளித்துள்ளது.
வைரலாகும் குறுந்தகவல் முற்றிலும் போலி என அரசு நிறுவனமான பிஐபி (Press Information Bureau) தெரிவித்துள்ளது. இதனை பிஐபி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட்டில் தெரிவித்து இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியில் புதிய டிக் பற்றிய விவரங்கள் அந்நிறுவன வலைத்தளத்தில் அப்டேட் செய்யப்படவில்லை. வலைத்தளத்தில் தற்சமயம் இருப்பது போன்று இரண்டு புளூ டிக் பற்றிய விவரங்களே இடம்பெற்றிருக்கின்றன.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
முன்னதாக வாட்ஸ்அப்பில் ஒரே சமயத்தில் ஒரு சாட்டிற்கு மட்டுமே குறுந்தகவலை ஃபார்வேர்டு செய்ய வழி வகுக்கும் புதிய கட்டுப்பாடை வாட்ஸ்அப் அமலாக்கியது. ஏற்கனவே வாட்ஸ்அப் செயலியில் ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு குறுந்தகவலை ஃபார்வேர்டு செய்வதற்கான வசதி வழங்கப்பட்டு இருந்தது. கட்டுப்பாடு மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி உலகம் முழுக்க பரவும் போலி செய்திகளை முடக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது