வாட்ஸ்அப் நிறுவனம் ஷேர் ஜாய், நாட் ரூமர்ஸ் (Share Joy, Not Rumours) எனும் புதிய திட்டத்தை துவங்கியுள்ளது. புதிய திட்டத்தின் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை மிகவும் கவனமாக பயன்படுத்துவது பற்றி கற்பிக்க இருக்கிறது.
இந்தியாவில் பொது தேர்தல் விரைவில் துவங்க இருப்பதையொட்டி, வாட்ஸ்அப் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்கும் நடவடிக்கைகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் வழிமுறைகள் எவ்வித சிரமமும் இன்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
முன்னதாக டிவி, அச்சு ஊடகம் மற்றும் ரேடியோ விளம்பரங்களின் மூலம் வாட்ஸ்அப் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை நிறுத்துவது பற்றி பயனர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது. முதற்கட்டமாக இந்தியா முழுக்க பல லட்சம் பேருக்கு போலி தகவல்கள் பரவுவதை தடுக்கும் முறைகள் கொண்டு சேர்க்கப்பட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களில் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஃபார்வேர்டு செய்யப்படும் குறுந்தகவல்களை அடையாளப்படுத்தும் தகவல் இடம்பெறுகிறது. இத்துடன் ஒருவர் அதிகபட்சம் ஃபார்வேர்டு செய்யும் குறுந்தகவல்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் மற்றும் லோக்கல் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதே எங்களின் முக்கிய குறிக்கோள். பயனர்கள் போலி தகவல்களை எதிர்கொள்ளும் போது அவற்றை எவ்வாறு கண்டறிவது பற்றிய விவரங்களை வழங்குவதன் மூலம் அவர்களது பாதுகாப்பை அதிகப்படுத்த முடியும் என வாட்ஸ்அப் இந்தியா தலைவர் அபிஜித் போஸ் தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோக்களை வாட்ஸ்அப் உடன் இணைந்திருக்கும் நாஸ்காம் மற்றும் டி.இ.எஃப். மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட இருக்கின்றன. இந்த வீடியோக்களில் போலி விவரங்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்றும் இவற்றை மற்றவர்களுக்கு அனுப்பும் போது ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.