வாட்ஸ்அப் நிறுவனம் நீண்ட நாட்களாக சோதனை செய்து வந்த பேமண்ட் சேவையை முதற்கட்டமாக பிரேசில் நாட்டில் வெளியிட துவங்கியுள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் வாட்ஸ்அப் சாட் செய்தபடி தனிநபர் மற்றும் உள்ளூர் வியாபாரங்களுக்கு பணம் அனுப்பலாம்.
அந்த வகையில் வாட்ஸ்அப் மூலம் நேரடியாக பணம் செலுத்தும் வசதியை பெற்ற முதல் நாடாக பிரேசில் இருக்கிறது. பிரேசில் நாட்டில் வாட்ஸ்அப் செயலியை சுமார் 12 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவுக்கு அடுத்தப்படி வாட்ஸ்அப் செயலியை அதிகம் பயன்படுத்தும் நாடாகவும் பிரேசில் இருக்கிறது.
பிரேசில் நாட்டில் பல்வேறு சிறு வியாபரங்கள் வாட்ஸ்அப் செயலியை கொண்டு வியாபாரத்திற்கு விளம்பரம் செய்ய பயன்படுத்தி வருகின்றன. புதிய அம்சம் பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்கும் என பிரேசில் நாட்டிற்கான வாட்ஸ்அப் நிர்வாக அலுவலர் மேட் இடெமா தெரிவித்தார்.
வழக்கமாக வாட்ஸ்அப் செயலியில் புகைப்படம் அல்லது வீடியோ உள்ளிட்டவற்றை மற்றவர்களுக்கு அனுப்புவது போன்றே வாட்ஸ்அப் பேமண்ட் சேவையில் மற்றவர்களுக்கு பணம் அனுப்ப முடியும். வாட்ஸ்அப் நிறுவனம் இந்த அம்சத்தினை 2018 ஆம் ஆண்டு முதல் சோதனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.