வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் சேஞ்ச் நம்பர் (Change Number) அம்சம் ஆன்ட்ராய்டு, IOS மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் புதிய வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது. மற்ற அம்சங்களை போன்றே புதிய வசதியும் முதற்கட்டமாக பீட்டா பதிப்புகளில் சோதனை செய்யப்படுகிறது.
புதிய வசதி வாட்ஸ்அப் வாடிக்கையாளர் தங்களது வாட்ஸ்அப் சேவையை புதிய நம்பருக்கு மாற்றும் போது அவர்களின் கான்டாக்ட் மற்றும் க்ரூப்களில் உள்ளவர்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் தெரிவிக்கும். அந்த வகையில் புதிய நம்பரை மாற்றும் போது அதனை வாட்ஸ்அப் கான்டாக்ட்களுக்கு தனித்தனியே தெரிவிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
வாட்ஸ்அப் புதிய அம்சம் அதிகளவு மேம்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.97 பதி்ப்பில் பயனர்கள் தங்களது கான்டாக்ட்களுக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்புவது குறித்து தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்கள் விரும்பும் கான்டாக்ட்களை மட்டும் தேர்வு செய்யலாம்.
அடிக்கடி வாட்ஸ்அப் நம்பரை மாற்றுவோருக்கு புதிய அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியே குறுந்தகவல் மூலம் புதிய நம்பரை வழங்குவதற்கு மாற்றாக புதிய அம்சம் இந்த பணியை எடுத்துக் கொள்கிறது. பயனர் புதிய நம்பர் மாற்றியதும், பழைய சாட் விவரங்கள் அனைத்தும் புதிய நம்பரிலும் தோன்றி, குறிப்பிட்ட பயனர் புதிய மொபைல் நம்பர் மாற்றி இருக்கிறார் என்பதை குறிக்கும்.
முதற்கட்டமாக வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் விரைவில் ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியை பயன்படுத்துவோர் தங்களது செயலியை பிளே ஸ்டோரில் அப்டேட் செய்து புதிய அம்சத்தை பெற முடியும்.