இந்தியாவில் மிகவேகமாக பிரபலமான செயலிகளில் ஒன்றாக டிக்டாக் இருக்கிறது. இந்தியாவில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டு, பின் கடும் நிபந்தணைகளுடன் தடை நீக்கப்பட்டது. இதன்பின் டிக்டாக் பயனாளர் எண்ணிக்கை மேலும் அதிகமாகி வருகிறது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் சைபர் சட்டம் மற்றும் இ-பாதுகாப்பு துறை டிக்டாக் மற்றும் ஹலோ பைட்டேன்ஸ் நிறுவனங்கள் பதில் அளிக்கக் கோரி 24 கேள்விகள் அடங்கிய அறிக்கையை அனுப்பியது. பிரதமர் நரேந்திர மோடியிடம் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவாக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) அளித்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை அமைச்சகம் எடுத்தது.
இந்நிலையில், இந்திய அரசு சட்டத்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக டிக்டாக் தெரிவித்துள்ளது. இந்தியாவில் எங்களது தொடர் வெற்றிக்கு, உள்ளூர் மக்களின் பங்களிப்பின்றி சாத்தியமாகாது. எங்களது பயனர்கள் மீது அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவோம் என டிக்டாக் தெரிவித்துள்ளது.
இதுதவிர இந்தியர்களின் தகவல்கள் வெளிநாட்டு அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் எதிர்காலத்தில் வழங்கப்படாது என்பதை உறுதிப்படுத்தவும் மத்திய அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. டிக்டாக் செயலியை பயன்படுத்தும் சிறுவர்கள் பற்றியும் மத்திய அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் RSS அளித்த குற்றச்சாட்டுகளில் இரு செயலிகளில் தேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் தரவுகள் அதிகளவு பரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் சைபர் சட்டம் மற்றும் இ-பாதுகாப்பு துறை டிக்டாக் மற்றும் ஹலோ நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
ஜூலை 22 ஆம் தேதிக்குள் டிக்டாக் மற்றும் ஹலோ நிறுவனங்கள் பதில் அளிக்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் சைபர் சட்டம் மற்றும் இ-பாதுகாப்பு துறை உத்தரவிட்ட நிலையில், டிக்டாக் தனது பதிலை உடனடியாக அறிக்கையாக வெளியிட்டுள்ளது.