ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது பயனர்கள் அவர்களின் தனிப்பட்ட விவரங்களை இயக்குவதற்கென கூடுதல் வசதிகளை வழங்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் பயனர் விவரங்கள் மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளப்படுவதை இனி வாடிக்கையாளர்கள் தீர்மானிக்க முடியும்.
"பயனர்கள் எங்களிடம் பகிர்ந்து கொள்ளும் விவரங்களை நாங்கள் பாதுகாப்பது முக்கியமான விஷயம் ஆகும். இதேபோன்று பயனர்கள் பகிர்ந்து கொள்ளும் விவரங்களை இயக்க அவர்களுக்கு அதிகளவு வசதியை வழங்க வேண்டும்," என இன்ஸ்டாகிராம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இயக்க இன்ஸ்டாகிராமில் செட்டிங்ஸ் — செக்யூரிட்டி — ஆப்ஸ் மற்றும் வெப்சைட்ஸ் ஆப்ஷன் சென்று எந்தெந்த மூன்றாம் தரப்பு சேவைகள் பயனர் விவரங்களை இயக்குகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இத்துடன் மூன்றாம் தரப்பு சேவை பயனர் விவரங்களை கோரும் போது அவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் மேம்பட்ட ஆத்தரைசேஷன் ஸ்கிரீன் இன்ஸ்டாகிராம் செயலியில் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.
"எந்தெந்த விவரங்களை மூன்றாம் தரப்பு கோருகிறது என்பதை தெரிவிக்கும் வகையில், மேம்பட்ட ஆத்தரைசேஷன் ஸ்கிரீனினை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இதனை அனுமதிக்கவும், நிராகரிக்கும் வசதி நேரடியாக ஆத்தரைசேஷன் ஸ்கிரீனிலேயே வழங்கப்படும்," என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.