உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் மெசஞ்சர் சாட்பாட் சேவையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்துடன் இணைந்து வெளியிட்டு உள்ளது. கொரோனா ஹெல்ப்டெஸ்க் சாட்பாட் என அழைக்கப்படும் இந்த மெசஞ்சர் சேவை மூலம் மக்களுக்கு கொரோனா பற்றி ஏற்படும் சந்தேகங்களை போக்கவும், போலி செய்திகளை தடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
புதிய சாட்பாட் சேவையை கொண்டு மக்கள் மத்திய சுகாதார மையத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அவசர உதவி எண் உள்ளிட்டவற்றை கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.
தொழில்நுட்ப வசதியினை சரியான நேர்ததில் பயன்படுத்தி மக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை வழங்கி அவர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள மத்திய அரசு அமைச்சகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது பெருமைக்குரிய விஷயம் என ஃபேஸ்புக் இந்தியா நிர்வாக இயக்குனர் அஜித் மோகன் தெரிவித்தார்
முன்னதாக உலகின் பெரும் பணக்காரரான பில்கேட்சுக்கு சொந்தமான பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிக்காக ஒரு நிதியத்தை இம்மாத தொடக்கத்தில் ஆரம்பித்தது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க், அந்த நிதியத்துக்கு உதவ முன்வந்துள்ளார்.
அவருக்கு சொந்தமான ‘சான் ஜுகர்பெர்க் இனிஷியேட்டிவ்’ என்ற தொண்டு நிறுவனம், ரூ.185 கோடி நன்கொடை அளிக்கிறது. இதை ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில், மார்க் ஜுகர்பெர்க்கும், அவருடைய மனைவி பிரிஸ்சில்லா சானும் தெரிவித்தனர்.
இந்த ஆராய்ச்சிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளைக்கு பிறகு அதிக நன்கொடை அளிப்பது மார்க்
ஜுகர்பெர்க் ஆவார். அவர் வெளிஅமைப்புக்கு அளித்த மிகப்பெரிய நன்கொடை இதுவே ஆகும்.
“வைரசை குணப்படுத்த இதுவரை உள்ள மருந்துகளின் அடிப்படையில், கொரோனாவை தடுப்பதற்கான, பாதிப்பை குறைப்பதற்கான மருந்து ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும்” என்று ஜுக்கர்பெர்க் கூறினார்