இந்தியாவில் விரைவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி ஃபேஸ்புக் வெப்சைட்டில் விளம்பரங்களில் விசேஷ மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய மாற்றங்களின்படி ஃபேஸ்புக்கில் இடம்பெறும் அரசியல் விளம்பரங்களை யார் வழங்கி இருக்கின்றனர், அதற்காக அவர்கள் எவ்வளவு செலவு செய்துள்ளனர் போன்ற விவரங்களை அனைவரும் பார்க்க முடியும்.
ஒவ்வொரு விளம்பரத்திலும் விளம்பரதாரர்கள் தங்களை அடையாளப்படுத்த அவர்கள் இயக்கும் ஃபேஸ்புக் பக்கம், அல்லது நிறுவனம் உள்ளிட்ட பெயர்களில் ஒன்றை வழங்க வேண்டும். விளம்பரங்களை வழங்கும் போது மற்ற நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிடும் போது விளம்பரதாரர் சார்பில் ஃபேஸ்புக்கிற்கு மொபைல் நம்பர், ஈமெயில் முகவரி, இந்திய தேர்தல் ஆணையம் வழங்கும் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கூடுதலாக வழங்க வேண்டும்.
அரசியல் விளம்பரங்களை பயனர் க்ளிக் செய்யும் போது ஆட் லைப்ரரி எனும் பக்கம் திறக்கும். இங்கு விளம்பரம் தோன்றும் தேதி மற்றும் அவற்றை எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்ற விவரங்களும், இதற்கு விளம்பரதாரர் செலவிட்டிருக்கும் தொகை உள்ளிட்ட விவரங்களை பார்க்க முடியும்.
முன்னதாக இதே திட்டங்களை அமல்படுத்த இருப்பதாக ஃபேஸ்புக் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிவித்தது. இதன் மூலம் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் அரசியல் விளம்பரங்களை தெளிவாக கண்டறிய முடியும். புதிய விதிமுறைகள் ஃபேஸ்புக் சார்பில் தற்சமயம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இவை பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் அமலாகும் என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.