கழிப்பறைகளைத் தேடியலைந்த காலம் போயே போய்விட்டது. பொதுக் கழிப்பறைகளையும், பேருந்து நிலையங்களையும் தேடி இனி ஓட வேண்டியதில்லை. தகவல் தொழில்நுட்பத்தின் பலனால், நம் இடத்தில் இருந்துகொண்டே கழிப்பறைகளைக் கண்டறிவதற்கான செயலி வந்துவிட்டது.
'ஈரம் சைண்டிஃபிக்' என்ற தனியார் நிறுவனம், இந்தியா முழுவதும் 18 மாநிலங்களில், 1300 இ – கழிப்பறைகளைக் கட்டியுள்ளது. அத்தோடு 'இ – டாய்லெட்' என்ற பெயரில் செயலியையும் உருவாக்கியுள்ளது. இதன்மூலம் இந்தியா முழுக்க உள்ள இ- கழிப்பறைகளை, ஸ்மார்ட் போன்கள் மூலமாகவே கண்டறியலாம். ஜிபிஎஸ் மூலம் கழிப்பறைகள் இருக்கும் இடங்களைக் கண்டுபிடித்துப் பயன்படுத்த முடியும்.
பொது மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டி, பொது இடங்களில் நிறுவப்படும் கழிப்பறைகளே இ- கழிப்பறைகள் எனப்படுகின்றன. அவற்றின் மறுமுனைகள் அனைத்தும் கழிவு நீர் கால்வாய்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
நம் இடத்தில் இருந்துகொண்டே, அருகில் உள்ள கழிப்பறைகளைக் கண்டுபிடித்து பயன்படுத்தலாம். மற்றொரு தேடுதல் பட்டியில், தேவைப்படும் இடத்தை உள்ளீடு செய்தும் தேட முடிகிறது.
உதாரணமாக இ- கழிப்பறை என்றால் என்ன, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகள் என்னென்ன, பயனர்கள் உள்ளே போய் மாட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கிறதா, ஒருவர் இ-கழிப்பறையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது மற்றொருவர் உள்ளே நுழைய முடியுமா, ஒருவர் எவ்வளவு நேரம் கழிப்பறையின் உள்ளே இருக்க முடியும் ஆகிய அடிப்படைக் கேள்விகளுக்கான பதில்கள் இச்செயலியில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.