உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் தவறான செய்தியை பரப்புவதாக ரஷ்ய நிறுவனங்களுக்கு பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து, ரஷ்யா அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. பேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களை தங்கள் நாட்டில் முடக்கியது. அதாவது, உக்ரைனுக்கு ஆதரவாக தகவல்களை பதிவிடும் அனைத்து தளங்களையும் முடக்கும் வகையிலும் புதிய 'போலி செய்தி' சட்டத்தை நிறைவேற்றியது.
இன்ஸ்டாகிராம் தடை
இது குறித்து மார்ச் 11ஆம் தேதி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி, "திங்கட்கிழமை ரஷ்யாவில் இன்ஸ்டாகிராம் தடை செய்யப்படும். இதனால் 80 மில்லியன் ரஷ்ய பயனர்கள் பாதிக்கப்படுவர். அதுமட்டுமில்லாமல், வெளிநாடுகளில் இருந்து ரஷ்யா பயனர்களை பின் தொடருபவர்களும் பாதிக்கப்படுவர். இது சரியான முடிவு இல்லை" என்று தெரிவித்திருந்தார்.
இன்ஸ்டாகிராம் தடை குறித்த தகவல்கள் ரஷ்யாவில் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, பயனர்கள் பலரும் பிற சமூக ஊடகங்களின் இணைப்புகளை பதிவிட்டு, இனி எங்களுடன் இதில் இணைந்திருங்கள் என்று தெரிவித்திருந்தனர். சிலரோ இன்ஸ்டாகிராமை தொடர்ந்து பயன்படுத்துவதற்கான சிறந்த VPN-கள் குறித்த பதிவுகளை இணையத்தில் பரவவிட்டு வந்தனர்.
போலி செய்தி சட்டம்.
இந்த 'Fake News Law' சட்டத்தைக் கொண்டு ரஷ்ய நாட்டிற்கு எதிராக கருத்து தெரிவிக்கப்படும் தளங்கள் அனைத்தும் முடக்கப்படும். அதுமட்டுமில்லாமல், பதிவிட்டவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கருத்துச் சுதந்திரத்தை வேரோடு பிடுங்கும் செயல் என டெக் நிறுவனங்கள் கடுமையாக தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த சூழலில், கடந்த வாரம் பேஸ்புக், ட்விட்டரைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமும் ரஷ்யாவில் தடை செய்யப்படும் என அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்திருந்தார். அதனை மெய்ப்பிக்கும் விதமாக, இன்று இன்ஸ்டாகிராம் தளத்திற்கு ரஷ்யாவில் முழு தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையைத் தொடர்ந்து, அந்நாட்டில் உள்ள 8 கோடிக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பயனர்கள், தங்கள் கணக்குகள் மற்றும் சேகரித்து வைத்திருந்த தரவுகளை இழந்துள்ளனர்.